உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்
முன்னுரை
கருத்துக்களை எளிதில் சொல்வதற்கேற்ற எழுத்து வடிவமே உரைநடையாகும். எந்த இலக்கண மரபுகளுமின்றி பேசுவதுபோல எழுதுவது இந்நடையின் தனிச்சிறப்பாகும். படிப்பவர்கள் எளிதில் புரிந்துகொள்ள உரைநடை பெரிதும் உதவுகிறது.
தமிழ் உரைநடை தொன்மை வாய்ந்தது. தமிழ் மொழியில் எழுதப் பெற்ற முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் உரைநடை தொடர்பான குறிப்பு இடம் பெற்று உள்ளது. உரை வகை நடையே நான்கு என மொழிபடும்(பொருள் : 475 : 5) என்பது தொல்காப்பியச் சூத்திரம். உரைநடை இலக்கியம் நான்கு வகைப்படும் என்பது இதன் பொருள். என்றாலும், அந்தக் காலத்தைச் சேர்ந்த உரைநடை நூல்கள் இன்று கிடைக்கப் பெறவில்லை.
இளங்கோவின் உரைநடை
சிலப்பதிகாரக் காலத்தில் மேலும் வளர்ந்து உள்ளது. சிலப்பதிகாரம் செய்யுள் வடிவில் அமைந்தது. அதில், செய்யுளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் உரைநடையில் சில குறிப்புகள் இடம் பெற்று உள்ளன. இதனால், சிலப்பதிகாரத்தை ‘உரை இடை இட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்று குறிப்பதும் உண்டு..
நக்கீரர் உரைநடை
தமிழ் மொழியில் முதன்முதலில் ஏட்டில் எழுதப் பெற்ற முதல் உரை இறையனார் அகப்பொருள் உரை ஆகும். இறையனார் அகப்பொருள் என்னும் பொருள் இலக்கண நூலுக்கு நக்கீரரால் சொல்லப்பட்டுப் பிற்காலத்தில் ஏட்டில் எழுதப் பெற்ற உரைதான் இது.
தொல்காப்பிய உரைநடை
தொல்காப்பியம் என்ற தமிழிலக்கண நூலுக்கு பல்வேறு உரைகள் வந்துள்ளன. அவற்றுள் தொல்காப்பியம் முழுவதுக்குமான உரை இளம்பூரனரின் உரையாகும். மேலும் தெய்வச்சிலையார், கல்லாடர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் பேராசிரியர் போன்றோரும் தொல்காப்பியத்துக்கு உரை எழுதியுள்ளனர்.
இலக்கிய உரைநடைகள்
பத்துப்பாட்டுக்கும், சீவகசிந்தாமணிக்கும் நச்சினார்க்கினியர் உரைஎழுதியுள்ளார். சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லாரின் உரை செல்வாக்குப் பெற்றதாகும். திருக்குறளுக்கு பரிமேலழகரின் உரை புகழ்பெற்றதாகும். திருக்குறளுக்கு நிறையபேர் உரையெழுதியிருந்தாலும் மு.வரதராசனார் அவர்களின் எளிய உரையே மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
மணிப்பிரவாள நடை
மணி தமிழ்ச் சொல்லைக் குறிக்கும். பிரவாளம் வடமொழிச் சொல்லைக் குறிக்கும். பிரவாளம் என்றால் பவளம்/பவழம் என்பது பொருள். மணியும் பவளமும் கலந்து தொடுக்கப் பெற்ற மாலை அழகாக அமையும். அதுபோலத் தமிழுடன் வடமொழிச் சொற்களை மிகுதியாகக் கலந்து உரை எழுதுவது அழகாகக் கருதப் பெற்றது. தமிழில் வைணவ பக்தி இலக்கியங்களுக்கு இவ்வகை உரைநடையில் தான் உரைகள் எழுதப் பெற்றன..
ஐரோப்பியர் உரைநடை
தமிழ் இலக்கியங்கள் பெரிதும் கவிதைகளாகவே இருப்பதால் அவற்றை எளிதாகப் புரிந்துகொள்ளும்விதமாக இவர்கள் எளிய உரைநடையைக் கையாண்டனர். அவர்களுள் இராபர்ட் டி நொபிலி என்னும் தத்துவ போதகர் பத்துக்கும் மேற்பட்ட உரைநடை நூல்களை இயற்றினார் இதனால் இவரை உரைநடையின் தந்தை என அழைப்பர். இவரைத் தொடர்ந்து வீரமாமுனிவர் பரமார்த்தகுரு கதை உள்ளிட்ட பல உரைநூல்களைத் தந்தார். பிறகு ஜி.யு.போப் அவர்களும் நல்ல உரைநடை நூல்களைத் தந்தார்.
இருபதாம் நூற்றாண்டு உரைநடை
ஐரோப்பியரைத் தொடர்ந்து தமிழ்ப்புலவர்கள் பலரும் தமிழ் உரைநடையை வளர்த்தனர். ஆறுமுக நாவலர், சிவஞானமுனிவர், மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், சோம.இளவரசு, தெ.பொ.மீ, உ.வே.சா, திரு.வி.க, வையாபுரிப்பிள்ளை, மு.வ, ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இராமலிங்க வள்ளலாரின் மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய உரைநூல்களும், திரு.வி.க அவர்களின் மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும் என்ற உரையும் புகழ்பெற்ற உரைகளாகும்.
முடிவுரை
தமிழில் உரைநடை வளர்ச்சியின் காரணமாக அறிவியல், இலக்கியம், ஆன்மீகம், பொது அறிவு, வணிகம் எனப் பலதுறைகளிலும் பல அரிய நூல்கள் கிடைத்தன. உரையாசிரியர்களால் உரைநடை வளர்ந்தது; செய்யுளைச் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பிற்காலத்தில் தமிழ் மேலும் பல துறைகளில் வளர உதவியது.
Comments
Post a Comment