கந்திற்பாவை வருவதுரைத்த காதை — மணிமேகலை 22
முனைவர் கி.கோவிந்தன் மணிமேகலை கண்களைத் திறந்து பார்த்தாள். சென்றநாள் முழுவதும் உதயகுமாரன் வருகைக்குப் பயந்து, தான் சம்பாபதி கோவிலில் மேற்கு வாயிலை நோக்கி இருந்த கம்பக் கடவுளின் கீழே தரையில் படுத்து உறங்கியது நினைவில் எழுந்தது. எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். கோவிலுக்குள் ஒருவரும் இல்லை. சம்பாதியும் உபரி தெய்வங்கள் மட்டும்தான். கம்பத்தில் வீற்றிருந்த தெய்வம் அசைவது போலிருந்தது. அதன் முகத்தை மணிமேகலை உற்றுநோக்கினாள். “நேற்று நடந்தது எதுவும் தெரியாமல் இப்படித் தூங்கிவிட்டாயே!” என்றது தெய்வம். “அப்படி என்ன விசேடமாக நிகழ்ந்தது?” என்று கேட்டாள் மணிமேகலை. கம்பத்தில் தெய்வம் அடைபட்டிருந்த இடத்தின் நீள அகலத்தில் மாற்றம் எதுவுமின்றிக் கம்ப தெய்வத்தின் உதடுகளும் கண்களும் மட்டும் அசைவுற்றுப் பேசியது, மணிமேகலைக்கு முதலில் விந்தையாகவும் பிறகு அதுவே பழகியும் போய்விட்டது. “நேற்று இளவரசனுக்கு விஞ்சையன் வாளினால் மரணம் என்று விதி எழுதியிருந்தது.” “ஆ!” என்றாள் மணிமேகலை. “முன்பே நிச்சயிக்கப்பட்ட நிகழ்வை மாற்றவல்லவர் யார்?” “அப்பட...