இரட்டைக் காப்பியங்கள்
இரட்டைக் காப்பியங்கள்
முனைவர்.கி.கோவிந்தன்
முன்னுரை
ஏதேனும் ஒரு வகையில் ஒற்றுமை உடைய அல்லது
தொடர்புடைய இரண்டை “இரட்டை” என்பது மரபு. சான்றாக இரட்டைப் பிள்ளைகள், இரட்டைப் புலவர்கள் (இளஞ்சூரியர் & முதுசூரியர்), இரட்டை நகரங்கள் (ஹைதராபாத் & செகந்திராபாத்) ஆகியவற்றைக் கூறலாம். இவ்வாறு தமிழ் இலக்கியங்களுள் “இரட்டைக் காப்பியங்கள்”
சிலப்பதிகாரம் & மணிமேகலை ஆகிய இரு காப்பியங்களைக் கூறலாம். கோவலன், கண்ணகி இருவரின் வாழ்வைப் பற்றியது
சிலப்பதிகாரம் ஆகும். கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்த மகளான மணிமேகலைப் பற்றியது
மணிமேகலைக் காப்பியம் ஆகும். முன்னதை இயற்றியவர் இளங்கோவடிகள்; பின்னதை இயற்றியவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். இவ்விரண்டிற்கும் இடையே உள்ள
தொடர்புகளை பின்வருமாறுக் காணலாம்.
இரட்டைக் காப்பியங்கள் - ஒற்றுமை
·
இரு காப்பியங்களும் அணிகலன்களின் பெயர் கொண்டவை.
·
கரு ஒன்று; உரு இரண்டு போலக்;
கதை ஒன்று; காப்பியம் இரண்டு.
·
சிலம்பு பெற்றோர் பற்றியது. மேகலைப் பிள்ளையைப் பற்றியது. ஒரு குடும்பக் கதை
இரண்டு காப்பியங்களாகப் படைக்கப்பட்டுள்ளது.
·
சிலம்பு எங்கு முடிகிறதோ, அங்கு மேகலை தொடங்குகிறது. அதாவது
சிலம்பின் தொடர்ச்சியே மணிமேகலை.
·
அமைப்பிலும் ஒப்புமை உண்டு. இரண்டும் 30 காதைகளைக் கொண்டவை. இரண்டும்
ஆசிரியப்பாவால் ஆனவை. இரண்டும் முதல் நூல்கள் ஆகும்.
·
இல்லற வாழ்வின் சிறப்பை சிலம்பும், துறவறத்தின் மாண்பினை மணிமேகலையும் உரைக்கின்றன.
·
இரு காப்பியங்களும் பெண்களை
மையமாகக் கொண்டவை.
·
இரண்டிலும் கடவுள் வாழ்த்து இல்லை. இரண்டும் விழாவில் அதாவது சிலம்பு திருமண
விழாவிலும் மேகலை இந்திர விழாவிலும் தொடங்குகின்றன.
·
இளங்கோவும், சாத்தனாரும் சமகாலப் புலவர்கள். “முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே அருளுக” என்று சாத்தனார் உரைக்க, இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார். ஒருவர் கேட்க இன்னொருவர் பாடியது.
·
அறம், பொருள், இன்பம் மூன்றையும் பாடுவது சிலம்பு. வீடுபேற்றினை மேகலைப் பாடுகின்றது.
·
இரு காப்பியங்களும் “நம்மை மறந்தாரை நாம் மறக்கமாட்டோம்” என்னும் பண்பின் அடிப்படையாகப் பிறந்தவை.
·
தன்னை மறந்தக் கோவலனைக் கண்ணகி மறவாமல், சிலம்பு
தந்து மதுரைக்குப் போக செயல்பட்டவள் அங்ஙனம் செய்யாது இருப்பின் கண்ணகியின் கதை
இல்லை.
·
அதேபோன்று மாதவி, தன்னை மறந்த கோவலனை, தானும் மறந்து போகாமல் துறவறம்
பூண்டு, மகளையும் துறக்க செய்யாது இருப்பின் மணிமேகலைக்
கதை இல்லை.
·
எனவே கண்ணகி, மாதவி இருவரின் தம்மை
மறந்தாரைத் தாம் மறக்கமாட்டாத
பண்பே, காப்பியம் இரண்டுக்கும் தோற்றுவாய் ஆகும்.
இரட்டைக் காப்பியங்கள் - வேற்றுமை
·
இரட்டைக் குழந்தைகள் இடத்தும் மாறுபாடும், வேறுபாடும் இருப்பதுபோல, இக்காப்பியங்களிலும் பேதங்கள் உள்ளன.
·
சிலம்பு வரலாற்றுக் காப்பியம்; கற்பனையை நீக்கினாலும் காப்பியத்தின் கட்டுக்கோப்பு குலையாது.
·
மேகலையோ கற்பனைக் காப்பியம்; மணிமேகலா தெய்வமும்
அமுதசுரபியும் அகற்றப்படின் கதையில்லை.
·
சிலம்பு சமணக் காப்பியம். மணிமேகலை பௌத்தக் காப்பியம்.
·
சிலம்பு பொருட்தன்மையால் பெயர்
பெறுகிறது. மேகலைப் பாத்திரத்தால் பெயர் பெறுவது.
முடிவுரை
இரண்டு காப்பியங்களுக்கு இடையில் சில வேறுபாடுகள் இருப்பினும், காலத்தால் மாறுபட்டிருப்பினும், கதையால், கருத்தால் ஒன்றி நிற்கும் ஒற்றுமையால்
இரட்டைக் காப்பியங்கள் எனப் போற்றப்படுகின்றன
,,
Comments
Post a Comment