குறுந்தொகை

முனைவர் கி.கோவிந்தன்
தமிழ்துறை
69. குறிஞ்சி - தோழி கூற்று 

பாடியவர்: கடுந்தோட் கரவீரனார். கரவீரம் என்பது சோழ நாட்டில் திருவாரூருக்கு அருகில் உள்ள ஓரூர். இவர் அந்த ஊரைச் சார்ந்தவராக இருந்ததால் இப்பெயரைப் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.  இவர் பாடியதாக சங்க இலக்கியத்தில் இந்த ஒரு பாடல் மட்டுமே காணப்படுகிறது.

பாடலின் பின்னணி: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தலைவன் இரவு நேரத்தில் தலைவியைக் காணவருவதைத் தலைவியும் தோழியும் விரும்பவில்லை. இரவு நேரத்தில் வந்தால், அவனுக்கு எதாவது தீங்கு வருமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். ஒருநாள் இரவு தலைவியைக் காணத் தலைவன் வருகிறான். அப்பொழுது, “’ இனி, நீ இரவில் வரவேண்டாம். இவ்வாறு களவொழுக்கத்தில் உங்கள் காதலைத் தொடர்வதைவிட, நீ தலைவியைத் திருமணம் செய்துகொண்டு வாழ்வதே சிறந்தது.” என்று தலைவனிடம் தோழி  மறைமுகமாகக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே. 

அருஞ்சொற்பொருள்: கருங்கண் = கருமை நிறமான கண்கள்; தா = தாவுதல்; கலை = கரிய ஆண்குரங்கு; பெரும்பிறிது = இறப்பு; கைம்மை = கணவனை இழந்த நிலைமை; உய்யா = தாங்கிக்கொள்ள முடியாத; காமர் = விருப்பம்; மந்தி = பெண்குரங்கு; கல்லா = பயிற்சி இல்லாத; வன் = வலிய; பறழ் = குட்டி ; கிளை = உறவு; அடுக்கம் = பக்க மலை; செகுத்தல் = கொல்லுதல்; சாரல் = மலைச்சாரல்; நடுநாள் = நள்ளிரவு; வாரல் = வருவதைத் தவிர்.

உரை: கருமை நிறமுள்ள கண்களையும், தாவும் இயல்பையும் உடைய ஆண்குரங்கு இறந்ததால், கைம்மைத் துன்பத்தைத் தாங்கமுடியாத, அந்த ஆண்குரங்கின் துணையாகிய பெண்குரங்கு, தன்னுடைய தொழிலில் (மரமேறுவது போன்ற தொழில்களில்) பயிற்சி இல்லாத தன்னுடைய வலிய குட்டியை, சுற்றம் ஆகிய குரங்குகளிடம் ஒப்படைத்துவிட்டு, உயர்ந்த மலைப்பக்கத்திலிருந்து தாவித் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் மலைச்சாரலையுடைய நாட்டுக்குத் தலைவனே! இனி, நீ நள்ளிரவில் வரவேண்டாம். நீ நள்ளிரவில் வந்தால் உனக்குத் தீங்குண்டாகும் என்றெண்ணி நாங்கள் வருந்துவோம். நீ நீடூழி வாழ்வாயாக!

விளக்கம்: ”இரவில் வருவதால் உனக்குத் தீங்கு வரலாம். அவ்வாறு உனக்குத் தீங்கு நேர்ந்தால் தலைவி உயிர் வாழமாட்டாள். ஆகவே, நீ இரவில் வந்து களவொழுக்கத்தைத் தொடர்வதை நிறுத்திவிட்டு, முறைப்படி அவளைத் திருமணம் செய்துகொள்.” என்று தோழி தலைவனிடம் மறைமுகமாகக் கூறுகிறாள்.

ஆண்குரங்கு இறந்ததால், கைம்மையுடன் வாழ விரும்பாத பெண்குரங்கு, தன் உயிரைப் போக்கிகொண்டதைப்போல், நீ நள்ளிரவில் வரும்பொழுது புலி, யானை, பாம்பு முதலிய விலங்குகளின் கொடுமையால் நீ இறக்க நேர்ந்தால், தலைவியும் உன்னைப்பிரிந்து வாழ விரும்பாமல் இறந்துவிடுவாள் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்.

உள்ளுறை உவமத்திற்கு அப்பால் இன்னொரு செய்தியும் இப்பாடலில் உள்ளது. ”தலைவ! உன் நாட்டில் அஃறிணைப் பொருளாகிய  பெண்குரங்குகூடத் தன் துணையாகிய ஆண்குரங்கு இறந்தவுடன் தான் உயிர் வாழாமல் இறக்குமெனின், எம் தலைவி மட்டும் உன்னைப் பிரிந்து எப்படி வாழ்வாள்? அவளுடைய உணர்ச்சியை உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லையா?” என்று தோழி மறைமுகமாகக் கேட்பதாகவும் தோன்றுகிறது. இவ்வாறு, ஒரு பாடலில் உள்ளுறை உவமத்திற்கு அப்பாலும் ஒருபொருள் இருக்குமானால் அஃது இலக்கணத்தில் “இறைச்சி” என்று அழைக்கப்படுகிறது. பெரும்பான்மைத் தலைவனின் கொடுமையைக் கூறும் இடங்களிலும், சிறுபான்மை அன்பை உரைக்கும் இடங்களிலும் புலவர்கள் அகத்திணைப் பாடல்களில் இறைச்சியை பயன்படுத்துவது வழக்கம்.  

184. தலைவன் கூற்று
184.  தலைவன் கூற்று

பாடியவர்: ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன். ஆரிய அரசர் பலர் ஆர்வத்தோடு தமிழைக் கற்றதாகக் கூறப்படுகிறது.  இந்த அரசன் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: நெய்தல்.
கூற்று: கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. (கழறல் = இடித்துரைத்தல்)
கூற்று விளக்கம்: அறிவிற் சிறந்த தலைவன் ஒருவன் கடற்கரைச் சோலையில் இருந்த பெண் ஒருத்தியைக் கண்டான். அவளைக் கண்டவுடன் அவள்மீது காதல் கொண்டான்.  அவள் நினைவாகவே இருந்தான். அதைக் கண்ட அவன் தோழன் அவனைக் கடிந்துரைத்தான். அதற்குத் தலைவன், “அந்த கடற்கரைச் சோலை அருகே உள்ள் சிற்றூருக்குச் செல்பவர்கள் யாராக இருந்தாலும் அந்தப்பெண் தன் கண்ணால் வீசும் வலையில் அகப்படாமல் இருக்க முடியாது.  நான் கூறுவது உண்மை. அவள் வாழும் சிற்றூருக்குச் செல்லுவதைத் தவிர்க” என்று மறுமொழி கூறுகிறான்.

அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை
குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே
இதற்குஇது மாண்டது என்னாது அதற்பட்டு
ஆண்டொழிந் தன்றே மாண்தகை நெஞ்சம்
மயிற்கண் அன்ன மாண்முடிப் பாவை
நுண்வலைப் பரதவர் மடமகள்
கண்வலைப் படுஉம் கான லானே. 

கொண்டு கூட்டு: மயிற்கண் அன்ன மாண்முடிப் பாவை நுண்வலைப் பரதவர் மடமகள்
கண்வலைப் படுஉம் கானலான், மாண்தகை நெஞ்சம்  இதற்கு இது மாண்டது என்னாது அதற்பட்டு, ஆண்டு ஒழிந்தன்று. ஆன்றோர்க்கு அறிகரி பொய்த்தல் இல்லை. சிறுகுடிச் செலவு குறுகல் ஒம்புமின்!



அருஞ்சொற்பொருள்: கரி = சாட்சி; ஆன்றோர் = அறிஞர் (பெரியோர்); குறுகல் = அடைதல், செல்லுதல்; ஓம்புதல் = தவிர்த்தல்; மாண்டது = பெருமையுடையது; ஆண்டு = அங்கே; மாண் = மாட்சிமை; மாண்தகை = மாட்சிமைப்பட்ட தகுதி; பரதவர் = நெய்தல் நில மக்கள்; மடம் = இளமை; கானல் = கடற்கரைச் சோலை.

குறுந்தொகை-231.                                                                                     தலைவி கூற்று பாடியவர்: பாலைபாடிய பெருங்கடுங்கோ. 
திணை: மருதம்.
கூற்று: வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் பரத்தையோடு சிலகாலம் வாழ்ந்தான். பின்னர் தன் நடத்தை தவறானது என்பதை உணர்ந்தான். இப்பொழுது, தன் மனைவியோடு வாழ விரும்புகிறான். தலைவி தன்மீது கோபமாக இருப்பாள் என்பதை உணர்ந்த தலைவன், தலைவியின் தோழியைத் தலைவியிடம் தூதாக அனுப்புகிறான். தோழி, “உன் கணவர் உன்னோடு வாழ விரும்புகிறார். அவர் தன் தவறை உணர்ந்துவிட்டார். அவரை மன்னித்து ஏற்றுக்கொள்” என்று தலைவியிடம் வேண்டுகிறாள். தலைவி, தலைவன்மீது தனக்குள்ள கோபத்தை வெளிப்படுத்தித் தோழியின் வேண்டுகோளை ஏற்க மறுக்கிறாள்.

ஓரூர் வாழினும் சேரி வாரார்
சேரி வரினும் ஆர முயங்கார்
ஏதி லாளர் சுடலை போலக்
காணாக் கழிப மன்னே நாணட்டு
நல்லறி விழந்த காமம்
வில்லுமிழ் கணையிற் சென்றுசேட் படவே.

கொண்டு கூட்டு: ஓரூர் வாழினும் சேரி வாரார்; சேரி வரினும் ஆர முயங்கார்; நாணட்டு நல்லறிவு இழந்த காமம் வில்லுமிழ் கணையிற் சென்று சேண் பட, ஏதிலாளர் சுடலை போலக் காணாக் கழிப.

அருஞ்சொற்பொருள்: சேரி = தெரு (சேர்ந்து வாழும் இடம் சேரி); ஆர = மிக (நன்றாக); முயங்குதல் = தழுவுதல். ஏதிலாளர் = அயலார்; சுடலை = சுடுகாடு; மன், ஏ – அசைச்சொற்கள்; அட்டு = அழித்து; கணை = அம்பு;சேண் = தொலை.

உரை: தலைவர் நம்மோடு ஓரே ஊரிலே வாழ்ந்தாலும் நாம் இருக்கும் தெருவிற்கு வரமாட்டார். நாம் இருக்கும்  தெருவிற்கு வந்தாலும் அவர் என்னை நன்றாகத் தழுவ மாட்டார். நாணத்தை அழித்து, நன்மை தீமைகளை உணரும் அறிவை இழந்த என்னுடைய காமம், வில்லால் எய்யப்பட்ட அம்பைப் போல, நெடுந்தூரத்தில் விழுந்து அழியும்படி, அயலாருடைய சுடுகாட்டைக் கண்டால் விலகிச் செல்லுவது போல் நம்மைக் கண்டும் காணாதவர் போல் விலகிச் செல்கிறார்.
233. தலைவன் கூற்று
233.  தலைவன் கூற்று


பாடியவர்: பேயனார். முல்லைத் திணை வளங்களை சிறப்பாகப் பாடுவதில் இவர் மிக்க ஆற்றல் உடையவர். இவர் ஐங்குறுநூற்றின் ஐந்தாவது நூறாகிய முல்லைத்திணைப் பாடல்களையும் (401 – 500), குறுந்தொகையில் மூன்று பாடல்களையும் (233, 359, 400), அகநானூற்றில் ஒரு பாடலும் (234) இயற்றியுள்ளார்.
திணை: முல்லை.
கூற்று: பட்டபின்றை (பட்ட பின்றை - களவு வெளிப்பட்ட பிறகு) வரையாது சென்று வினைமுற்றி மீளுந் தலைமகன்,தேர்ப்பாகற்குச்             சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களுடைய களவொழுக்கம் அனைவருக்கும் தெரிய வந்தது.  தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தான், அதனால், திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகச் சென்றான். அவன் தேடிய பொருளோடு திரும்பிவரும் பொழுது, தன் தலைவியின் ஊரை மகிழ்ச்சியோடு தேர்ப்பாகனுக்குச் சுட்டிக்காட்டுகிறான்.

கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறுகுழி
கொன்றை யொள்வீ தாஅய்ச் செல்வர்
பொன்பெய் பேழை மூய்திறந் தன்ன
காரெதிர் புறவி னதுவே உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்
வரைகோ ளறியாச் சொன்றி
நிரைகோற் குறுந்தொடி தந்தை யூரே! 

கொண்டு கூட்டு: உயர்ந்தோர்க்கு நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் வரைகோள் அறியாச் சொன்றி, நிரைகோல் குறுந்தொடி தந்தை ஊர் கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறுகுழி கொன்றை ஓள் வீ தாஅய்ச் செல்வர் பொன்பெய் பேழை மூய் திறந்தன்ன கார் எதிர் புறவினது.

அருஞ்சொற்பொருள்: கவலை = ஒரு வகைக் கிழங்கு; கெண்டிய = தோண்டிய; ஒள் = ஒளி பொருந்திய ; வீ = பூ; தாஅய் = பரவிய ; மூய் = மூடி ; புறவு = முல்லை நிலம்; மிச்சில் = எஞ்சிய பொருள்; வரைகோள் = இவ்வளவு என்று ஒரு எல்லை கொள்ளுதல்; சொன்றி = சோறு; கோல் = திரண்ட.


உரை: (பாக!) திரண்ட சிறிய வளையல்களை வரிசையாக அணிந்துள்ள என் தலைவியினுடைய தந்தையின் ஊர், உயர்ந்தவர்களுக்கு நீரோடு தானம் செய்து கொடுத்த  பிறகு எஞ்சிய பொருளும், யாவருக்கும் எல்லை இல்லாத அளவுக்குச் சோறும் உடையது.  அந்த ஊர், கவலைக் கிழங்கைத் தோண்டி எடுத்ததால் உண்டான அகன்ற வாயை உடைய சிறிய குழிகளில்,  ஒளி பொருந்திய கொன்றை மலர் நிறைந்து பரவி இருப்பதால்,  செல்வந்தர்கள், பொன்னையிட்டு வைக்கும் பெட்டியின், மூடியைத் திறந்து வைத்தாற் போன்ற தோற்றத்தை உடைய கார்காலத்தை ஏற்றுக் கொண்ட, முல்லை நிலத்தின்கண் உள்ளது.
 
Email This

264. தலைவி கூற்று
264. தலைவி கூற்று


பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று : ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவனது பிரிவால் தலைவியின் உடலில் பசலை தோன்றியது. அதைக் கண்டு தோழி கவலைப் படுகிறாள். தோழியின் கவலையைக் கண்ட தலைவி, “நான் தலைவனின் நட்பின் உறுதியை நன்கு அறிவேன். ஆகவே, நான் இந்தப் பிரிவைப் பொறுத்துக்கொள்வேன். என் உடலில் பசலை தோன்றினாலும், என் மன உறுதியால், இந்தப் பசலை நிலைத்து நிற்காமல் மறைந்து போய்விடும்.” என்று கூறுகிறாள்.

கலிமழை கெழீஇய கான்யாற் றிகுகரை
ஒலிநெடும் பீலி துயல்வர இயலி
ஆடுமயி லகவும் நாடன் நம்மொடு
நயந்தனன் கொண்ட கேண்மை
பயந்தக் காலும் பயப்பொல் லாதே. 

கொண்டு கூட்டு: கலிமழை கெழீஇய கான்யாற்று இகு கரை ஒலிநெடும் பீலி துயல்வர இயலி ஆடுமயில் அகவும் நாடன் நம்மொடு நயந்தனன் கொண்ட கேண்மை பயந்தக் காலும் பயப்பு ஒல்லாது. 

அருஞ்சொற்பொருள்: கலி = இடி முதலியவற்றால் உண்டாகும் ஆரவாரம்; கெழீஇய = பொருந்திய; கான்யாறு = காட்டாறு; ஒலித்தல் = தழைத்தல்; இகுதல் = தாழ்தல்; இகுகரை = தாழ்ந்த கரை; பீலி = மயில்தோகை; துயல்வரும் = அசையும்; இயலி = நடந்து; அகவுதல் = கூவுதல்; நயத்தல் = விரும்புதல்; கேண்மை = நட்பு; பயந்தக் காலும் = பசலையைத் தந்தாலும்; பயப்பு = பசலை; ஒல்லாது = பொருந்தாது.

உரை: (தோழி!)  ஒலியுடன் பெய்கின்ற மழையுடன் பொருந்திய, காட்டாற்றின் தாழ்ந்த கரையில்,  தழைத்த நெடிய தோகை அசைய நடந்து, ஆடுகின்ற மயில்கள் கூவும் நாடன், நம்மோடு விரும்பி உண்டாக்கிக் கொண்ட நட்பானது, நமக்குப் பசலையைத் தந்தாலும், அப் பசலை நம்முடன் பொருந்தாமல் மறைந்து போய்விடும்.

சிறப்புக் குறிப்பு: ”கலிமழை கெழீஇய கான்யாற்று இகுகரை ஒலிநெடும் பீலி துயல்வர இயலிஆடுமயில் அகவும் நாடன்” என்றது, கார்காலம் வந்ததைத் தலைவன் உணர்வான் என்பதையும், ஆண்மயில் பெண்மயிலைக் கூவி அழைப்பதை கண்ட தலைவன், தலைவியை நாடி விரைவில் வருவான் என்பதையும் குறிக்கிறது. இதை இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருளாகக் கருதலாம். மற்றும், முன்பு ஒலியுடன்கூடிப் பெய்த மழை இப்பொழுது காட்டாற்றில் வெள்ளமாக வருவதைக் கண்டு ஆண்மயில் பெண்மயிலை அழைக்கிறது என்றது தலைவன் முன்பு அன்போடு இருந்ததை நினைத்துத் தலைவி இப்பொழுது இன்புறுகிறாள் என்பதைக் குறிப்பதாகக் கருதலாம்.


”நயந்தனன் கொண்ட கேண்மை” என்றது  தலைவன் தலைவியை நாடிவந்து நட்பு கொண்டான் என்பதைக் குறிக்கிறது.  தலைவனுடைய உறுதியான நட்பைத் தலைவி நன்கு அறிந்தவளாகையால், தலைவன், விரைவில் தன்னை நாடி வருவான் என்று எண்ணுகிறாள். அதனால், தன் பசலை நிலைத்து நில்லாமல் மறைந்துவிடும் என்று தோழியிடம் கூறுகிறாள். 
 

Comments

Popular posts from this blog

Operating System Structure

Asymptotic Notations

ASP.NET Events Handling