பெரியபுராணம்

 முன்னைவர் கி.கோவிந்தன்
உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை

காப்பியப் பகுப்பு

பெரிய புராணம் என்னும் பெருங்காப்பியம் தமிழகச் சூழலையும், 63 அடியார் பெருமக்களையும் மையமாகக் கொண்டு திகழ்கின்றது. இந்நூல் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களையும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் உடையது. 4286 விருத்தப் பாக்களையுடைய ஒரு பெரு நூலாகும். பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும் இரண்டாம் காண்டத்தில் எட்டு சருக்கங்களையும் அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது. காப்பிய கதையானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்று, சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாக கயிலாயத்தில் முடிகிறது. முதற் காண்டத்தில்,

 1. திருமலைச் சருக்கம்,

2. தில்லை வாழ் அந்தணர் சருக்கம்,

3. இலை மலிந்த சருக்கம்,

4. மும்மையால் உலகாண்ட சருக்கம்,

 5. திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும், இரண்டாம் காண்டத்தில்

1. வம்பறா வரிவண்டுச் சருக்கம்,

 2. வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்,

 3. பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம்,

 4. கறைக்கண்டன் சருக்கம்,

 5. கடல்சூழ்ந்த சருக்கம்,

6. பத்தராய்ப் பணிவார் சருக்கம்,

 7. மன்னிய சீர்ச் சருக்கம்,

 8. வெள்ளானைச் சருக்கம் என்னும் எட்டு சருக்கங்களும் அமைந்துள்ளன.

காப்பிய அமைப்பு

சுந்தரரின் சிறப்பு, அடியார்களின் சிறப்பு, சிவபெருமானின் அருட்திறம், குரு (ஆசிரியன்) , இலிங்கம் (இறைவன் திருமேனி) , சங்கமம் (அடியார்) ஆகிய முறைகளில் சிவனை வழிபட்ட நிலைகள், தொண்டின் திறம், சாதி, மத, இன வேறுபாடில்லாமல் அடியார் நோக்கில் கண்டு வழிபட்டு முத்தி பெற்ற தன்மைகள், சிவன் அடியார்களை ஆட்கொண்ட விதம் முதலான பல செய்திகளைக் கொண்டதாக இந்நூல் விளங்குகின்றது. அடியார்களின் வரலாறும். அவர்கள் கடைப்பிடித்த தொண்டு நெறியும், இறைவன் அவர்களை ஆட்கொண்ட விதமும் இந்நூல் முழுதும் எடுத்துக் கூறப்படுவதால் சேக்கிழார், திருத்தொண்டர் மாக்கதை என்று பெயரிட்டார். செயற்கரிய செயல் புரிந்த அடியார்களின் (பெரியார்களின்) சிறப்பினை உரைப்பதால் இதனைச் சான்றோர்கள் பெரியர் புராணம் என்று கூற, காலப் போக்கில் பெரிய புராணம் என்று வழங்கப்பட்டது.

காப்பிய நோக்கம்

 சிவனை முதன்மைப்படுத்தி வழிபடும் சமயமாகிய சைவத்தையும் அடியார்களது வரலாறு தொண்டு நிறைந்த வாழ்வு முத்தி பெற்ற நிலை ஆகியவற்றையும் விரிவாகவும் தெளிவாகவும் புலப்படுத்துவதே பெரிய புராணத்தின் நோக்கம் ஆகும்.  காப்பியச் சிறப்பு அறுபத்து மூன்று நாயன்மார்களின் புகழ் மிக்க வரலாற்றினை உலகறிய பக்திச் சுவையோடு விரிவாக எழுதிய பெருமைக்கு உரியவர் சேக்கிழார் ஆவார். அவர் சோழ நாட்டு அமைச்சராக இருந்தமையால் நாட்டின் பல பகுதிகளுக்கும் நாயன்மார்கள் வாழ்ந்த ஊர்களுக்கும் நேரில் சென்று அவ்விடத்தில் செவிவழி மரபாக வழங்கும் வரலாற்றுச் செய்திகளையும் தொகுத்து இந்நூலை அமைத்தார் என்பர். பிற மொழிக் கதைகளைத் தழுவாமல் தமிழ் மக்களையும் தமிழகச் சூழலையும் மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய காப்பியங்களைப் போலவே பெரியபுராணம் என்னும் நூல் சிறப்புற்றுத் திகழ்கின்றது. ஆண் பெண் வேறுபாடின்றிப் பல இனங்களையும் தொழில் பிரிவுகளையும் சார்ந்த சிவனடியார்களைப் பற்றிய நூலாக அமைந்துள்ளதால் இந்நூலைத் தேசிய இலக்கியம் என்று சான்றோர்கள் பாராட்டுவர்.

நூலாசிரியர்-

 சேக்கிழார் சென்னைக்கு அருகிலுள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வேளாளர் மரபில் பிறந்தவர் அருண்மொழித் தேவர். இப்பெயரே அவருக்குப் பெற்றோர் இட்டு வழங்கியதாகும். சேக்கிழார் என்பது இவரது குடிப்பெயராகும். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதால் இரண்டாம் குலோத்துங்க சோழன் அவையில் முதலமைச்சராகப் பணிபுரிந்தார். அம்மன்னனின் வேண்டுகோளை ஏற்று அடியார்களின் பெருமையை வரலாறாக எழுதினார். இந்நூலின் பெருமையை உணர்ந்த மன்னன் அவரைப் பட்டத்து யானையின் மீதேற்றி நகர்வலம் செய்துஉத்தம சோழப் பல்லவராயன் என்னும் பட்டம் தந்து சிறப்பித்தான். இவருடைய காலம் கி.பி. 12 -ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். சிவத் தொண்டர்களின் வரலாற்றைச் சிறப்பித்த காரணத்தால் இவருக்குத் தொண்டர்சீர் பரவுவார் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. கல்வெட்டுகள் இவரை மாதேவடிகள் என்றும் இராமதேவர் என்றும் சிறப்பிக்கின்றன. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ என்று இவரைப் பாராட்டுகின்றார்.

Comments

Popular posts from this blog

Operating System Structure

Asymptotic Notations

ASP.NET Events Handling