கம்பராமாயணம்- அனுமப்படலம்

 

                
 முன்னைவர் கி.கோவிந்தன்
உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை

கம்பர்

    கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்" என்றொரு பழமொழியே உருவாகும் அளவிற்கு கம்பரது புகழும் கவித்திறமையும் அனைவராலும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ~கவிபேரரசர் கம்பர்| ~கவிச்சக்ரவர்த்தி கம்பர்| ~கல்வியில் பெரியவர் கம்பர்| என்றெல்லாம் அவரது கவித்திறனைப் பறைசாற்றும் அளவிற்கு அவருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் சொல்வன்மைக் கொண்டவராக இருந்த அவர் ஆழமான கவிதை அனுபவமும் கற்பனை ஆற்றலும் புலமைத் திறனும் பெற்று அவரது சமகாலத்துப் புலவர்களான ஓட்டக்கூத்தர் சேக்கிழார் போன்றோரின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். கம்பர் அவர்கள் கிபி 12 ஆம் நூற்றாண்டில் தஞ்சை மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில் திருவழுந்தூர் என்றழைக்கப்படும் தேரழுந்தூர் என்னும் ஊரில் ஆதித்தன் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். அவரது பெற்றோர்கள் கடவுள் நரசிம்மரின் தீவிர பக்தர்கள் என்பதால் அவருக்கு ~கம்பர்| என்று பெயர் சூட்டினர். ~கம்பா| என்றால் ~தூண் என்று பொருள். ~பக்தப் ப்ரகலாதனைக் காக்க நரசிம்மர் தூணைப் பிளந்து கொண்டு வந்தார்| என்ற பக்திக் கூற்றைக் கொண்டு அவருக்கு அவருடைய பெற்றோர் அப்பெயர் சூட்டினர். கம்பரை சடையப்ப வள்ளல் என்பவர் ஆதரித்து வந்துள்ளார். இவரே கம்பரை இளமைக் காலத்தில் பேணிக்காத்தவர் என்றும் பின்பே சோழ மன்னன் கம்பரை ஆதரித்து வந்ததாகவும் கூறுகின்றனர். சோழ மன்னன் கம்பநாடு என்ற பகுதியைக் கம்பருக்கு தந்துள்ளார். கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டமும் சோழன் தந்தது என்று கூறுகின்றனர்.

கம்பரின் கவிப்புலமை

    மாபெரும் கவிஞராக உருவெடுத்த கம்பரின் புகழை அறிந்த அப்போதைய சோழ மன்னர் அவருக்கு அழைப்பு விடுத்தார். அரண்மனைக்குச் சென்ற அவர் மன்னரின் அன்புக் கட்டளைக்கிணங்க அவருடைய படைப்புகளில் சில வரிகளை அவருக்குப் பாடிக் காட்டினார். அவரது கவித்திறனை நேரில் கண்டு வியந்த சோழ மன்னர் அவருக்குக் ~கவிஞர்களின் பேரரசர்| என்றும் அர்த்தமுடைய ~கவி சக்கரவர்த்தி| என்றும் பட்டம் சூட்டி அவருக்குச் சொந்தமான பெருவாரிய நிலத்தைப் பரிசளித்து அதற்கு ~கம்பநாடு| என்றும் பெயர் சூட்டினார்.

 இலக்கியப்பணி கம்பரின் தாய்மொழி

     தமிழ் என்றாலும் சமஸ்கிருதத்திலும் அவர் புலமைப் பெற்றே விளங்கினார். அதற்குச் சான்று அவர் எழுதிய ~கம்பராமாயனம்|. முனிவர் வால்மீகி சமஸ்கிருதத்தில் படைத்த ராமாயணத்தை அவர் தமிழில் அவருக்குரித்தான பாணியில் மீண்டும் எழுதினார். அவரது பாடல் வரிகளின் அழகு, அற்புதமான நயம் உவமானம் மற்றும் பல வகையான வியக்கத்தகு கவிதை நடைகள் அவரது பாரம்பரிய கவிதைகளில் இடம் பெற்றிருக்கும். தமிழ்மொழியின் பெருமையை இடைக்கால காலகட்டங்களில் அற்புதமாக வெளிக்காட்டியதால் அவர் ~கம்ப நாட்டாழ்வார்| என்றும் அழைக்கப்பட்டார். அவர் கம்பராமாயணம் தவிர ~சிலையெழுபது| ~சடகோபர் அந்தாதி| ~சரசுவதி அந்தாதி| ~திருக்கை வழக்கம்| ~ஏரெழுபது| மற்றும் ~மும்மணிக்கோவை| போன்ற அற்புதப் படைப்புகளைப் படைத்துள்ளார். கவிச்சக்ரவர்த்தி கம்பர் கிபி 1250 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார். இதுவரை வந்த தமிழறிஞர்கள் பட்டியலில் கம்பர் யாரும் எட்ட முடியாத இலக்கில் உள்ளார் என்று தான் சொல்லவேண்டும். ஆனால் இன்றளவும் தமிழ் அறிஞர்கள் மத்தியில் கம்பனின் கவிதைத் தொகுப்புகள் இணையற்றதாகவே உள்ளன.

கம்பராமாயணம்

    இராமனது வரலாற்றைக் கூறும் நூல் இராமாயணம் ஆகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். கம்பராமாயணம் ஒரு வழி நூலாகும். இது வடமொழியில் வால்மீகி என்பவர் இயற்றிய இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்ட நூல் ஆகும். இது ஒரு வழி நூலாகவே இருந்தாலும் கம்பர் தனக்கே உரித்தான பாணியில் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளார். வடமொழி கலவாத தூய தமிழ்ச்சொற்களைத் தனது நூலில் கையாண்டதால் கம்பர் தொல்காப்பிய நெறி நின்றவர் என்று புகழப்படுகிறார். மூல இலக்கியமான வடமொழி இராமாயணத்திலிருந்து சில மாறுபாடுகளோடு கம்பர் இந்நூலை இயற்றியிருந்தார். கம்பர் இயற்றிய இராமாயணம் என்பதால் இது கம்பராமாயணம் என்று அழைக்கப்படுகிறது.

கம்பராமாயணம் - அமைப்பு

    கம்பராமாயணம் பாலகாண்டம் அயோத்தியா காண்டம் ஆரண்ய காண்டம் கிட்கிந்தா காண்டம் சுந்தர காண்டம்  யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும் நூற்றுப்பத்தொன்பது (119) படலங்களையும் உடையது. காண்டம் என்பது பெரும்பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும். ஏழாம் காண்டமாகிய "உத்திர காண்டம்" என்னும் பகுதியை கம்பரின் சம காலத்தவராகிய "ஒட்டக்கூத்தர்" இயற்றினார் என்பர். தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி கம்பரின் காலத்தில் (கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு) உச்சநிலையினை அடைந்தது என்பர். இந்நூலின் சிறப்பு கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் "தமிழுக்குக் கதி" (கம்பராமாயணம் திருக்குறள்) என்பர். கம்பரின் இராமாயணத்தைக் கம்பநாடகம் எனவும் கம்பச்சித்திரம் எனவும் கற்றறிந்த அறிஞர் பெருமக்கள் அழைப்பதுண்டு. கம்பரின் யாப்பு வண்ணங்கள் நூல் நெடுகிலும் மின்னி மிளிர்கின்றன. "வரமிகு கம்பன் சொன்ன வண்ணமுந் தொண்ணூற்றாறே (யாப்பு வண்ணங்களின் எண்ணிக்கை 96)" என்றொரு கணக்கீடும் உண்டு. கம்பராமாயணம் பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது. அணி பொருள் நடை ஆகியவற்றால் சிறந்து விளங்குவது. சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்டு தமிழ்ப்பண்பாட்டோடு இயைந்து விளங்குவது.

கம்பராமாயணத்தின் வழி நூல்கள்

 கம்பர் இந்த நூலை இயற்றிய பிறகு எண்ணற்ற இராமாயண நூல்கள் படைக்கப்பட்டன. இவ்வாறு இராமாயண நூல்கள் தோன்றுவதற்கு கம்பராமாயணம் தூண்டுதலாக இருந்தது என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அவையாவன தக்க ராமாயணம் குயில் ராமாயணம் இராமாயண அகவல் கோகில இராமாயணம் அமர்த இராமாயணம் இராமாயணக் கீர்த்தைகள் மற்றும் பால இராமாயணம்.                          

 அனுமப்படலம்

 

இராமனுக்கும் வானரத் தலைவன் சுக்கிரீவனுக்கும் இடையே ஏற்படும் நட்பைக் கூறுவது கிட்கிந்தா காண்டம். அனுமன் என்னும் தொண்டன் இராமனுக்கு வாய்த்த நிகழ்ச்சியைக் கூறுகிறது.

இராமனும் அனுமனும்

அனுமப் படலத்தில் அனுமன் இராமனைச் சந்திக்கிறான். சுக்கிரீவனுடன் நட்புக் கொள்ளச் செய்கிறான். சுக்கிரீவனின் மனைவியை அவன் அண்ணன் வாலி கவர்ந்து கொள்கிறான். இதனால் வாலியைக் கொல்வதற்கு இராமன் உதவியைச் சுக்கிரீவன் வேண்டுகிறான். அதற்குக் கைம்மாறாகச் சீதையைத் தேடுவதற்கும் இலங்கைப் படையெடுப்பிற்கும் வானரப் படை உதவும் என்று கூறுகிறான். இராமன் வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்கு முடி சூட்டுகிறான்.

அனுமனின் இலங்கைப் பயணம்

பின்னர்க் கார்காலம் வருகிறது. கார்காலம் கழிந்ததும் அங்கதன் தலைமையில், அனுமனும் பிறரும் சீதையைத் தேடித் தென்திசை நோக்கிச் செல்கின்றனர். வழியில் சடாயுவின் அண்ணன் சம்பாதியைப் பார்க்கின்றனர். சம்பாதி சீதை இலங்கையில் சிறை இருப்பதைக் கூறுகிறான். வானரப் படை இராம நாமம் கூறச் சம்பாதிக்கு முன்பு இழந்த இறக்கை முளைக்கிறது. இலங்கை செல்லக் கடலைக் கடப்பது யார் என்ற பிரச்சனை ஏற்படுகிறது. சாம்பவான் அனுமனின் பேராற்றலைக் கூறுகிறான். அனுமன் இலங்கை செல்ல உடன்பட்டு மயேந்திர மலை உச்சியை அடைந்து கடலைக் கடக்க விஸ்வரூபம் எடுக்கிறான். இத்துடன் கிட்கிந்தா காண்டம் நிறைவடைகிறது.

 

Comments