சீவகசிந்தாமணி கேமசரியார்இலம்பகம்
சீவகசிந்தாமணி கேமசரியார்இலம்பகம்
கேமசரியார் இலம்பகம் கதைச்சுருக்கம்
பல்லவ நாட்டை விட்டு நீங்கிய சீவகன், சித்திர கூடம் என்னும் தவப்பள்ளியைச் சார்ந்தான். அங்கிருந்த தவ முனிவர்களுக்கு நல்லுபதேசம் செய்தருளி, அவர்களைத் திருந்துமாறு செய்து, பின், தக்க நாட்டுத் தலைநகரான கேமமாபுரத்தை அடைந்தான். அந் நகரத்துள் சிறந்த வணிகன் சுபத்திரன். அவன் மனைவி நிப்புதி; மகள் கேமசரி. அவள் பிறந்தபோது சாதகம் கணித்தவர்கள், 'இவள் எந்த ஆடவனைக் கண்டு நாணம் கொள்கிறாளோ அந்த ஆடவனே இவளுக்குக் கணவனாவான்' எனக் கூறியிருந்தனர். அதனால் சுபத்திரன் பலரையும் தன் மனைக்கு அழைத்து விருந்தளித்து உபசரித்து வந்தான். ஆயினும் கேமசரி யாரையும் கண்டு நாணம் கொள்ளவில்லை, ஒரு நாள் சுபத்திரன், அருகன் கோயிலில் சீவகனைச் சந்தித்து அவனது அழகைக்கண்டு வியந்து தன்னில்லத்திற்கு அழைத்து வந்தான். அப்பொழுது கேமசரி சீவகனைக் கண்டு நாணமுற்றுக் காதல் கொண்டாள். சுபத்திரன் மகிழ்ந்தான.; சீவகன் - கேமசரி திருமணம் சிறப்பாக நடைபெற்றது. அவளுடனும் சீவகன் இரண்டு திங்களே தங்கியிருந்து பிரிந்து சென்றான். செல்லும்போது எதிரில் வந்த ஒருவனுக்கு அறிவுரை கூறி அணிகலன்களைக் கொடுத்தான். பிரிவாற்றாமையால் வருந்திய கேமசரிக்குத் தாய் நிப்புதி ஆறுதல் கூறினாள். கேமசரியும் ஆற்றியிருந்தாள்.
சீவகனின் காட்டு வழிப்பயணம்
வானின் வழங்கும் வண் கை மணி செய் ஆர மார்பின் தேனும் வழங்கும் பைம் தார் விசையை சிறுவன் தேம் கொள் நானம் வழங்கும் கோதை நைய வெய்ய ஆய கானம் வழங்கல் மேவி காலின் ஏகினானே
மேகம் போலக் கொடை கொடுக்கும் கையினையும், முத்துக்களாலான மாலையை அணிந்த மார்பினையும், தேன் சிந்தும் மாலையினையும் உடைய, விசயையின் மகனான சீவகன், வண்டுகள் தங்கும் புனுகு கமழும் மாலையை உடையவளான பதுமை வருத்தம் அடைய, கொடுமை நிறைந்த காடுகளில் காலால் நடந்து சென்றான். வில்லிடம் உள்ள நாணின் முறுக்கு அந்த வில் அழியும்வரை தீராது. அது போலத் தாம் இறக்கும் வரை அழியாத திருந்திய கற்பினை உடைய மகளிரிடம், தான் அணிந்த இலை கலந்த மலர் மாலை செய்த துன்பம் நீங்க அம் மகளிருடைய கொங்கைகளைத் தன் கண்களால் உற்றுப் பார்த்து, பிறகு அணைத்துக் கொள்ளும் தோள்களை உடையவனான சீவகன், மலைகளை இடையே கொண்ட காட்டை அடைந்து மகிழ்ச்சியோடு சென்றான். பழங்கள் நிறைந்த வாழைக் காட்டிலே, கரிய மையைப் பூசி வைத்தது போன்ற அழகில்லாத முகங்களை உடைய குரங்குகளும் முசு எனப்படும் கருங்குரங்குகளும் சீவகனைக் கண்டு பயந்து ஓடின. அவற்றின் அச்சம் அகலுமாறு அருளோடு பார்த்தவாறு சீவகன் செல்லும் அவ்வழியின் முன்னே குளிர்ந்த வெள்ளிய அலைகள் நிறைந்த கடலைப் போல, நடப்பதற்கு இனிமையான ஒரு காடு தோன்றியது. வேட்கை கொண்டு நீரைப் பருகுபவர்களைப் போல ஆர்வத்தோடு தழுவி, பொருள் தீர்ந்தவுடனே தம்மை நாடிய ஆடவரைப் பிரியும் மணம் கமழும் கூந்தலைத் கொண்ட வேசிகளைப் போல, மொய்க்கும் இயல்புள்ள வண்டுகள், அழகிய மலர்க் கொடி சாயும்படி தழுவி இனிய தேனைப் பருகிவிட்டு, தேன் தீர்ந்தவுடன் அதைப் பிரிந்து அருகே நின்று தூற்றுவதைப் போல ஆரவாரிக்க, சீவகன் அதைப் பார்த்துக் கொண்டே மெதுவாகச் சென்றான்.
சீவகன்
தவப்பள்ளியை அடைதல்
புல்லும் அல்லியும் போகு உயர் நீள் கழை நெல்லும் நீர் விளை கேழலும் தோரையும் அல்ல தீம் பழம் காய் கிழங்கு ஆதியா நல்லவே நுகர்வார் பள்ளி நண்ணினான்
இவ்வாறு சென்ற சீவகன் இறைவனை எளிதாக வாழ்த்தி வலம் செய்துவிட்டு, முனிவர்கள் வாழும் சித்திரகூடம் முன்னே உள்ளது என்று சுதஞ்சணன் கூறியதால் அதனைக் காண விரும்பித் தனியே சென்று, முனிவர்கள் வாழ்கின்ற ஒரு குளிர்ச்சி பொருந்திய மலாப்பொழிலில் உள்ள பள்ளியைக் கண்டான். புல்லரிசி, அல்லிக்காயில் உள்ள அரிசி, மிக உயர்ந்த மூங்கில் அரிசி, நீரில் விளைகின்ற குளத்து நெல், தோரை என்னும் நெல் ஆகியவற்றையும், இவையல்லாதவையான இனியபழம், காய், கிழங்கு முதலானவையுமான நல்ல உணவுப் பொருள்களையே உண்பவரான முனிவர்கள் வாழும் பள்ளியைச் சீவகன் அடைந்தான். அங்குள்ள முனிவர்கள் அரிய கோட்பாடுகளைக் கொண்டவர்; நிறைந்த ஐந்து தீக்களின் நடுவில் இருந்து வீட்டுலகை வளைத்திடும் பெருமை உடையவர்; விளக்கமான நான்மறைகளைப் பயின்ற நாவைப் பெற்றவர்;. வள்ளிக் கிழங்காகிய சுவைமிகுந்த உணவும், மலையில் உள்ள வாழையின் தேர்ந்தெடுத்த இனிய பழமும் ஆகிய இவற்றுள் சிலவற்றைத் தந்த பிறகு, மிகுதியான நீரைப் பொழியும் மேகம் போன்றவனே! விருந்து உண்பாயாக! என்று கூறி, சீவகனை மகிழ்ந்து உபசரித்தனர். "இந்தச் சீவகன் எல்லாக் கலைகளும் நிறைந்த கல்வியை உடையவன், உண்மைப் பொருளைக் கேட்டறிந்தவன். இவனிடமுள்ள அக்கல்வி, கேள்விகளை நாமும் அறிவோம்" என்று எண்ணி, தம் உயர்ந்த கட்டுரைகளில் ஒன்றிரண்டை உரைத்தனர்.
சீவகன்
முனிவர்களுக்கு உபதேசித்தல்
ஐயர் கூறலும் அண்ணலும் கூறுவான் சையம்
பூண்டு சமுத்திரம் நீந்துவான் உய்யுமேல் தொடர்ப்பாட்டின் இங்கு யாவையும் எய்தினார்களும்
உய்ப என்று ஓதினான் அங்குள்ள முனிவர்கள் சில கட்டுரைகள் கூற, சீவகனும் தன் கருத்தைக் கூறினான். கல்லைக்
கழுத்திலே கட்டிக்கொண்டு கடலிலே நீந்துபவன் பிழைப்பான் என்றால், இவ்வுலகில் விரதங்களை மேற் கொண்டவர்களும்
பிழைப்பர்" என்று பல நூல்களைச் சான்று காட்டிச் சீவகன் ஓதினான். வீடு
பெறுவதற்காகச் சடையைச் சிறப்பாக வளர்த்தல் உடம்பைக் காவி நிறம் ஊட்டிய ஆடையாலே
போர்த்துக் கொள்ளுதல் மண்டையோட்டைக் கைக் கொள்ளுதல் தனியே இருத்தல் என்று
கூறப்படும் இத் தன்மையவை, சிறப்பற்ற
பிறவிக்கு விதையாகும் என்று சான்றோர் கூறுவர் என்று சீவகன் ஒதினான். அங்குள்ள
முனிவர்கள், " காளையே! நாங்கள்
மேற்கொண்ட வழி நல்ல வழி இதுவல்லாததான நீ கூறிய வழி தூய்மையற்ற வழி. அதனை நாங்கள்
தெரிந்திருக்கிறோம் திருமால் கூறிய இந்த வழியிலே தீமை இருந்தால் அதை நீ
கூறுக" என்று கேட்க , சீவகன் பின்
வருமாறு விளக்கினான். திருமால் எங்களுக்கு, காயும் கனிகளும் உண்பதனால் நல்லவை அல்லாத
வினைகள் எல்லாம் நில்லாமல் நீங்கும் என்று உரைத்தார் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
அவ்வாறானால், உயர்ந்த நீண்ட
மரங்களிலே தொங்குகின்ற சிறந்த சிறகுகளை உடைய ஒடுங்கும் இயல்பைக் கொண்ட வெளவால்கள்,
அருகில் உள்ள பழங்களை
உண்பதால் அவற்றின் பழவினைகள் நீங்கும் அல்லவா?.,“ அல்லிக்காயில் உள்ள அரிசியையும்
புல்லரிசியையும் சாப்பிட்டு திருமால் கூறிய நெறியிலே நோற்பதனால் தீவினைகள்
நீங்கும் என்றால் கொடிய வெம்மை உடைய காட்டிலே கற்களை உண்டு வாழும் புறாக்கள்
யாவும், தம்மைப் பிணித்த
இரு வினைகளைப் புறங்கண்டு வெற்றி பெறும் அல்லவா? நாங்கள் நீண்ட சடை முடியை உடையவர்களாக, நீரிலே குளித்து, நிலத்திலே தங்கி வாழ்ந்து வருத்திய உடம்பைப்
பெற்றதாலே சிறந்த வீட்டைப் பெறுவோம்' என்றால், கரடி காட்டிலே
சென்று, குளத்திலே குளித்து
வாழ்வதால் அது அக் காட்டிலிருந்தே வீட்டை அடைய வேண்டும். அவ்வாறு கரடி அடைவதில்லை.
அதனால் உமது பொருளற்ற உரையை விடுங்கள்" என்று சீவகன் ஓதினான்.. “ நுண்ணிய ஆடை எரிந்து அழிவதற்கு அஞ்சி, நெருப்பை அந்த ஆடைக்குள்ளே வைத்து மூடி,
அதைக் கொண்டுபோய் மறைவான
இடத்தில் வைத்தால், அப் பொங்கும்
நெருப்பு ஆடையைச் சுட்டு எரிக்காமல் விட்டு விடுமா? கழுத்திலே புனுகைப் பூசியுள்ள மகளிரின்
காவலுடைய வீட்டை நீங்கிக் காட்டுக்குச் சென்று, அங்கு முன்பு செய்த கலவித் தொழிலையே மேற்கொண்டு
பாவத்தைப் போக்க நினைத்தால், போக்க முடியுமா?
முடியாது என்று சீவகன்
ஓதினான்.; காய்முதிர்ச்சி
பெற்றால் கனியாகி விழுவதைப் போல முதிர்ச்சியடையும் இவ்வுடம்பு விழுந்து விடும்.
மூங்கில் முற்றி வளர்ந்த இந்தக் காட்டிலே, காமனை வென்ற அருகக் கடவுளின் உருவத்துடன் நின்று விளக்கமுற இப்பொழுதே தோற்றுச்
சென்று, முற்றிய சொர்க்க
இன்பத்தை பெற்று, அனுபவிப்பதை
விரும்புங்கள்" என்று சீவகன் ஓதினான். “ஞானம் என்பது, உண்மையை அறிவது. காட்சி என்பது அவ்வாறு அறிந்த
பொருள்களைப் பொய்யின்றித் தெளிந்து நம்பிக்கை கொள்வது. ஒழுக்கம் என்பது
ஐம்பொறிகளையும் ஐம்புலன்களில் செல்லாமல் தடுத்து, உயிரைக் கெடாமல் அவ்வுயிர் உய்யும் வகையில்
நடப்பது| இம்மூன்றும்
ஒழுக்கமும் ( மும்மணிகள் ) இப்படி நிறைந்த பொழுதே இருவினையும் கெடும் " என்று
சீவகன் ஓதினான். மலை போன்றவனான சீவகன் இவ்வாறு கூறியதைக் கேட்டு, நல்வினை வந்தடையும் பக்குவம் பெற்ற முனிவர்கள்
தம் மனைவியரைத் துறந்து, "இன்று தாங்கள்
உன்னால் அறிவுண்டாக்கப் பட்டோம்" என்று கூறி, எழுந்து சென்று, காமனை வென்ற அருகனின் திருவடியை அடைந்து வீட்டை
அடையும் நல்வழியில் சேரப் பெற்றனர். அச்சமயம் சூரியன் மறைந்தான.; சீவகனும் இளைப்புத் தீர்ந்தான். இவ்வாறு
இளைப்பாறியபிறகு, இருள் மறைந்த
விடியற்காலையில், குற்றத்திலிருந்து
விடுபட்டவர்களான முனிவர்கள் வழிகாட்டியதால், மேல் உலகத்தில் இல்லாத மேன்மை மிக்க உண்மை
உடையவனான சீவகன், செல்ல வேண்டிய
திசையும் அங்கே உள்ள ஆறும் தெரிந்து கொண்டு சென்றான் .
சீவகன் தக்க
நாட்டை அடைதல்
படம் புனைந்து எழுதிய வடிவில் பங்கய தடம் பல
தழீஇயது தக்க நாடு அது வடம் கெழு போன்று இடம் பெரிது இனிது அதன் எல்லை எய்தினான்
ஒப்பனை செய்து தீட்டப்பட்ட ஓவியத்தின் வடிவம் போன்ற தாமரைக் குளம் பல சூழ்ந்ததும்
முத்துவடம் பொருந்திய வளரும் கொங்கையை உடைய மகளிரின் அழகு போல மிகவும்
இனிமையானதும், ' தக்கநாடு '
என்னும் பெயரை உடையதுமான
நாட்டின் எல்லையைச் சீவகன் அடைந்தான். இனிய குளத்தில் உள்ள அழகிய மலர் விரிந்து
வெளிப்படுத்திய மணமும், மலரை அணிந்த
கூந்தலை உடைய மகளிர் பூசிய சந்தன வாசமும், அகிற்புகை கலந்த மணமும், அந்த நாட்டின்
எல்லா இடங்களிலும் தங்கியிருத்தலால் அது தக்க நாடு என்னும் பெயரைப் பெற்றது.
அந்தத் தக்க நாடு, சண்பக மலர்களால்
தொடுக்கப் பட்ட மணம் மிகுந்த மாலையும், மணக்கும் சந்தனமும், சிறந்த பாக்கும்,
அழகிய வெற்றிலையும்,
உண்ணும் உணவும் என்னும்
இவற்றை, எல்லார்க்கும்
குறைவில்லாமல் பெற்றிருப்பது, வளமும் புகழும்
வாய்ந்த தக்க நாட்டின் இயல்பு இத்தகையதே. கரும்பைப் பெற்றுள்ள வளத்தை உடைய வயலில்,
அழகான தாமரை மலர்
சாய்ந்து வரப்பைச் சேர்ந்திருக்க, அத் தாமரையின்
வெற்றியிலே கிடந்த செந்நெற் கதிர், அரங்கிலே ஆபரணம்
அணிந்து வரும் நாடக மகளிரின் அழகிய நெற்றியிலே வண்டுகள் சூழ்ந்த தலைக் கோலம்
என்னும் அணிகலனின் தோற்றம் போலத் திகழ்ந்தது.
கேமமாபுரத்தின்
எழில்
வண்டுகள் வாழும் வளைந்த நீர்த்துறையில் கன்னியாகிய வாளைமீனின் மேல், நண்டின் நகம் பட்டது. அதனால் அந்த வாளை நடுக்கம் அடைந்து, நாணத்தால் அவ்விடத்தை விட்டு, உணவை வெறுத்து, ஒடுங்கியிருக்கும் நீரைத் தன்னிடம் பெற்றுள்ள அகழி சூழ்ந்த கேமமாபுரம் என்னும் நகரத்தின் இயல்பை இனி இயம்புவோம.; மதில் என்னும் செல்விக்கு, தோண்டி அமைக்கப்பட்ட அகழியே அழகான ஆடை; மதிலின் அடியில் உள்ள ஆளோடிகள் ஆகிய பாம்புரிகளே, புகழத்தக்க மேகலாபரணம், மதிலின்மேல் உள்ள ஞாயில் என்னும் உருப்பே, அணிகள் அணிந்த கொங்கை; விளங்கும் அழகிய கோபுரமே, திங்களைப் போல ஒளிவிடும் முகம்;. அந்த ஒளி வீசும் பொன் மதில், மத்தரம் என்னும் மலையைப் பாற்கடலில் காட்டிக் கடைந்து அமுத்ததை ஊட்டினாலும், அந்த அமுதத்துக்காக ஆசைப்பட்டு அந்த நகரை விட்டு நீங்குபவர்கள் இல்லை. ஆதலால், ஈட்டப்பட்ட வளம் மிகுந்த செல்வம் சேர்ந்திருக்கும் அப்பெரியநகரம் நகரங்களுக்கெல்லாம் தலைமையானது என்று உச்சிச் சூட்டு வைத்ததைப் போல் திகழ்ந்தது. பேரொலியை உடைய அந்த வளம் மிகுந்த நகரம், வீரர்களே எறியும் சுறாமீன்களாகவும் , ஏந்திய பூங்கொடிகளே மடங்கிவிழும் அலைகளாகவும், மலையைப் போன்ற மாளிகைகளே பெரிய மரக்கலங்களாகவும், கிடைத்தற்கரிய திருமகள் போன்ற மகளிரே அமுதமாகவும் திகழ ஆரவாரமுடைய கடலைப் போலத் திகழ்ந்தது. அந்த நகரம், சந்திரனின் தண்டுவடத்தைத் தேய்க்கும் உச்சியை உடைய மாளிகைகளைக் கொண்ட நீண்ட தெருக்கள் தோறும், கூந்தல் அவிழ்தலின் முத்து மாலைகள் விழுந்து, பொன்னால் செய்யப்பட்ட சிறந்த அணிகலன்கள் சிந்துவதாலே, நிதி அறையைத் திறந்து பார்த்ததை ஒத்த ஒரு தன்மை பெற்றது; அச்சம் உண்டாக்குவதால் புதியவர்கள் அங்குச் செல்ல முடியாத அழகோடு விளக்கம் பெற்றது .
சுபத்திரன் மகள்
கேமசரி
மாசு இலாள் பிறந்த ஞான்றே மதி வலான் விதியின் எண்ணி காசு இலாள் கண்ட-போழ்தே கதுமென நாணப்பட்டான் தூசு உலாம் அல்குலாட்கு துணைவனாம் புணர்-மின் என்று பேசினான் அன்று கொண்டு பெரு விருந்து ஓம்புகின்றான்
உலகத்திற்குத் திலகம் வைத்தாற் போன்றது கேமமாபுரம் என்னும், கேடற்ற நற்புகழ் பெற்ற பொன்னகரம். அந்நகரில் மாலைகள் நீண்ட வெண்கொற்றக் குடையைப் பெற்ற, உலகத்தின் காவலன் இருந்தான். அவனே, அச்சந்தரும் வேலேந்திய நரபதி தேவன் ஆவான். அந் நகரத்தில் அரசனை ஒத்த ஆண்டகையனாகச் சுபத்திரன் வாழ்ந்தான.; அவன் வடிவத்தில் ஒப்பில்லாதவன்; வேத விதிப்படி வாழும் வணிகன், கைக்கு நிகராக அமைந்த வேலை ஏந்தியவன். மணம் பரப்பும் மாலை சூடியவன்; மைபூசிய குளிர்ந்த கண்களைப் பெற்ற மகளிர் மயக்க, அவர்கள் இன்பத்தே தங்குவான். சுபத்திரன் நீண்ட வில் கொண்டு பயிற்சி செய்தலால் , பருத்து மலைபோலத் தோன்றும் தோளையுடையவன.; மழை பெய்யும் முகிலை வென்ற வண்மை மிக கையையுடையவன், அவனுடைய மனைவி நிப்புதி என்பாள் கேமசரி என்னும் பெண்ணைப் பெற்றெடுத்தாள.; கேமசரி , பிற மகளிரின் சிறந்த அழகை வென்றவள் என்று எல்லாத் திசைகளிலும் தன் பெயரின் நலத்தைப் பொறித்துப் பெண்மைக்குப் பெருவிளக்காகி நின்றாள். மாசிலாத மங்கை கேமசரி பிறந்தபோது, சோதிடன் ஒருவன், முறையாக ஆராய்ந்து, "இவள் கண்டபோதே, இவளை நாணமுறச் செய்பவன், இவளுக்குக் கணவனாவான். அவனுக்கே இவளை மணம் செய்து கொடுங்கள்" என்று கூறினான். அன்று முதல் தன் மகள் ஆடவர் பலரையும் காண்பதற்காகப் பெருவிருந்து அளித்தலைக் கைக்கொண்டான் சுபத்திரன். ஒரு பிடிக்குள் அடங்கும் இடையினாளும், வளை சூழ்ந்த தோளினாளுமான கேமசரி, தொங்கும் பைம்பொன் மாலை, பெரிய மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை, விருப்பம் தோற்றுவிக்கும் மணிகளால் செய்யப்பட்ட மாலை ஆகிய இவற்றுக்கிடையே மின்னலைப் போல நின்று, செம்பொன் துணைப் பொருந்தி, ஊழ் தனக்குத் தரவிருக்கும் கணவனைத் தேடி நோக்கினாள். சேயிழையாளான கேமசரிக்குக் கணவனாகும் திருமகனைக் கண்டுபிடிப்பதற்காக அவள் தந்தை ஒவ்வொரு நாளும் ஆயிரத்தெட்டு இளைஞர்க்கு ஆரமுது போன்ற சோறளித்து வந்தான். இவ்வகையில் பூங்கொடி போலும் மென்மை பெற்ற கேமசரிக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் சென்றன. முருக்கமலரின் இதழில் குங்குலிகத்தை ஊட்டி வைத்தாற் போன்ற, முறுவலையுடைய சிவந்த வாயையும், திருமகளின் அழகமைந்த விருப்பந்தரும் விழிகளையும், பருத்த கொங்கைகளையும், தேன் பொருந்திய மலர்மாலையையும், நெறித்த கூந்தலையும், அழகு செய்யும் பொன்னணிகளையும் பெற்ற கேமசரியின் வடிவ முதிர்ச்சியைக் கண்டு, அவளுடைய தாய் பொறுக்க முடியாமல் வருந்தினாள். ஆடவரை மருட்டும் பார்வை பெற்ற மாவடுவையும் மழையையும் ஒத்த விழிகளைக் கொண்ட மதி முகத்தையும், பூப் போன்ற மென்மையையும் பெற்ற கேமசரி, ஒப்பனை செய்த அழகுடன், திருமணமின்றித் தனியே பிருப்பதைக் கண்டு, அம்பு பட்ட மான் போலப் பார்த்து, கைவளை சுழலும்படி மெலிந்து நின்றாள் கேமசரியின் தாய்,
சீவகனைக் கண்ட
சுபத்திரன்
கேமமாபுரம் வந்த சீவகனைக் கண்டான் சுபத்திரன்.. பிடரி ஒலிக்கும் இசையையுடைய அழகிய முழவை ஒக்கும், வாயின் அழகு, வீரம் பொருந்திய புலியின் வாயை ஒக்கும். மலை போல அகன்ற மார்பில் வரிகள் மூன்றுள்ளன குற்றமற்ற பொன்னை யொத்த நாவும் கூர்மையுடைய தாயிருந்தது. அரிய மலை போன்ற தோள்கள் , தேவர்களின் அரசனாகிய இந்திரனுக்குரிய ஐராவதம் என்னும் யானையின் அழகு மிக்க துதிக்கையின் வடிவு கொண்டன. பெரிய பொன்மலை போன்ற தலைவனுக்குத் தாமரைப் மொட்டுப் போன்றதாய் , வலமாகச் சுழித்து பொருந்திக் குழிந்த இயல்போடு அழகோடு அமைந்த நாபியும் இனிதாகத் தோன்றும். தடித்து வரிகள் திரண்டு , பொன்னிற மூங்கிலரிசி அனையவாய் வெண் சிறு கடுகும் நுழைய முடியாதபடி நெருங்கி ஒளி செய்யும் கைவிரல்கள், தம் அளவிற்கேற்ற சூல் கொண்ட கெளிறு என்னும் மீளின் அழகைக் கெடுத்தன . முகத்திற்குப் பொருத்திய மூக்கு, வயிரத் தோட்டியை ஒத்தது. நீண்டு விளங்குகின்ற பற்களையுடைய வாய் பவழத்தை ஒக்கும். அகங்கையும், உள்ளங்காலும் பொருந்திய தாமரைப் பூவை ஒக்கும். ஆதலால் இவன் திருமகள் கணவனான திருமால் எனத்தேர்ந்த சுபத்திரன், இவனோடு பேசி ' இவன் திருமால் அல்லன் ' எனத் தெரிந்து பின் சீவகனைத் தேரிலே அமர்த்தி அழைத்துச் சென்றான். இவர்கள் இருவரும் தேரிலே வந்து கொண்டிருக்கும் போது, சுபத்திரன் வீட்டிலே, கூரிய நகத்தால் வலிய மலரச் செய்து தொடுத்த ஒரு செங்கழுநீர் மாலையை, நல்லிசை நல்கும் வீணையில் சூட்டி உலகுணர்ந்த கடவுளைப் பெண் கொடியாகிய கேமசரி பாடிக் கொண்டிருந்தாள். முத்து உமிழும் கடல் நீரின் நிறம் பெற்ற மணிவண்ணனும் மூன்று உலகும் பக்தியோடு பாடப் பெறுபவனுமாகிய அருகப் பெருமாளின் திருவடியைக கேமசரி பாடினாள.; அதைக் கேட்ட அரம்பை போன்ற நிப்புதி தன் கருத்தும் தன் மகள் கருத்தும் ஒத்திருத்தல் கண்;டு உவகை அடைந்து, இவளழகுக்கு ஏற்ற ஒரு வித்தகனை இவள் இப்போதே அடைய வேண்டும் என வேண்டினாள.;
Comments
Post a Comment