சீவக சிந்தாமணி அறிமுகம்
சீவக சிந்தாமணி அறிமுகம்
முனைவர் கி.கோவிந்தன்உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
சோழர்களுடைய ஆட்சிக் காலத்தில் இயற்றப்பெற்ற
காப்பியம் சீவக சிந்தாமணி. இது கி.பி. ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில்
தோன்றியது என்பர். சீவக சிந்தாமணிக்கு முன்னர் எழுந்த பெரிய நூல்கள் எல்லாம்
வெண்பாவாலும் அகவலாலும் இயற்றப்பட்டன. ஆனால் முதன்முறையாக ~விருத்தம்|
என்ற ஒரு புதுச்செய்யுள் வகையில் எழுதப்பட்டது சீவக
சிந்தாமணி. ~இது வரையிலும் பெரிய நூல்கள் எல்லாம் வெண்பாவாலும்
அகவலாலும் இயற்றப்பட்டு வந்த தமிழிலக்கிய வரலாற்றில், கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில், ஒரு புதுமையைப் புகுத்தியவர் திருத்தக்கதேவர் என்னும் சைன
முனிவர். அவர் சீவகன் என்ற அரசனுடைய வரலாற்றை ஒரு காப்பியமாகப் பாடியபோது, விருத்தம் என்ற புதுச் செய்யுள் வகையைப் பயன்படுத்தினார். மூவாயிரத்துக்கும்
மேற்பட்ட பாட்டுகள் கொண்ட ஒரு பெருங்காப்பியத்தை அந்தப் புதிய செய்யுள் வகையிலேயே
முழுதும் பாடி முடித்தார்| எனப் பேரா. மு. வரதராசனார் திருத்தக்க தேவரின் சிறப்பினை
எடுத்துரைக்கின்றார். விருத்தம் என்பது நான்கு அடிகள் உடையது. முதல் அடியில்
எத்தனை சீர்கள் வருமோ அத்தனை சீர்களே பிற மூன்று அடிகளிலும் வரும். முதல் அடியில்
அமைந்த சீர்களின் அமைப்பே அடுத்த அடிகளிலும் அதே முறையில் வரும். அதனால்
முதலடியின் ஓசையே பிற மூன்று அடிகளிலும் திரும்பத் திரும்ப ஒலிக்கும். ஓர் அடிக்கு
இத்தனை சீர்கள் வரவேண்டும், இன்ன அளவான சீர்கள் வரவேண்டும் என்ற வரையறை இல்லாமையால், விருத்தம் பலவகையாக விரிவு அடைந்தது. ஒரு விருத்தத்தின்
அடிகள் நீண்டு வரலாம்; மற்றொரு விருத்தத்தின் அடிகள் குறுகி வரலாம். சிறு சிறு
சீர்கள் கொண்ட ஒரு விருத்தம் பரபரப்பாகவோ, துடிதுடிப்பாகவோ ஒலிக்கலாம். நீண்ட
சீர்கள் கொண்ட மற்றொரு விருத்தம் ஆழமுடையதாகவோ, அமைதியுடையதாகவோ, உணர்ச்சி நீண்டதாகவோஒலிக்கலாம். ஆகவே, விருத்தம் என்ற பெயர் கொண்ட இது, ஒரு செய்யுள் வகையாக இருந்தாலும் நூற்றுக்கணக்கான
ஓசைவேறுபாடுகளைப் படைத்துக்காட்ட இடம் தந்தது. தமிழ்க்கவிதையில் ஏற்பட்ட இந்தப்
புரட்சியால் உணர்ச்சிக்கு ஏற்றவாறு கவிதையின்நடையை மாற்றியமைக்கும் வடிவச் சிறப்பு
மேலும் வளர்ந்து பெருகத் தொடங்கியது. பிற்காலத்தில் கம்பர் இதில் பெரும்
வெற்றிபெற்றார். சேக்கிழார், கச்சியப்பர் ஆகியோரும் இந்த யாப்பைப்
பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். வடமொழியிலுள்ள
ஷத்திர சூடாமணி,
கத்திய சிந்தாமணி, ஸ்ரீபுராணம் ஆகிய நூல்களில் உள்ள கதையைத் தழுவிச் சீவக
சிந்தாமணி எழுதப்பட்டது. சீவகசிந்தாமணி கூறும் சீவக மன்னனது வரலாறு, வடநாட்டுச் சார்பு உடையது. எனினும் தமிழகத்துச் சமூகத்தைப்பின்னணியாகக்
கொண்டு பாடப்பட்டுள்ளது. இந்த நூல் பிற்கால இலக்கிய வளர்ச்சிக்கு வழிகாட்டியாக
அமைந்தது என்பர். கம்பர்,
இக்காப்பியத்திலிருந்து, ~ஓர் அகப்பையைமுகந்து கொண்டார்| என்று கூறும் மரபு உண்டு. நாடு நகரம் முதலியவற்றை
வருணிக்கும் முறையிலும்,
ஐந்திணையாகப் பகுக்கப்படும்நிலங்களின் இயற்கை அழகுகளை
விளக்கும் முறையிலும்,
இசை முதலிய கலைகளை விளக்கும் முறையிலும், சீவக சிந்தாமணி, காப்பிய அமைப்பின் முன்னோடியாகச் சிறப்புற்றுத் திகழ்கிறது.
காதல் சுவை மிகுந்திருந்தாலும், எண்வகைச் சுவையும்இக்காப்பியத்தில் பெருமளவில் இடம்
பெற்றுள்ளன. இந்நூலுக்கு நச்சினார்க்கினியர் சிறந்த உரை ஒன்று எழுதியுள்ளார்.
பெயர்க் காரணம்
~சிந்தாமணி|
என்பது தேவர் உலகத்து மணிகளுள் ஒன்று. வேண்டியோர்க்கு
வேண்டியதை வழங்கும் தன்மையுடையது. சிந்தாமணிக் காப்பியமும் கற்போர்க்கு வேண்டியதை
வழங்கும் சிறப்புடையது. சீவகனின் தாயார் முதன் முதலில் தன் மகன் சீவகனுக்கு
இட்டபெயர் சிந்தாமணி. ~சீவ| என்பது பின்னர் ~அசரீரி|யாக ஒலித்ததால் சீவகசிந்தாமணி என்று பெயர்
பெற்றது என்பர்.
நூலின் அமைப்பு
இந்நூல் 13 இலம்பகங்களையும் (இலம்பகம் - காண்டம் என்பது போன்ற
பகுப்பு), 3145 செய்யுட்களையும் உடையது. நாமகள்இலம்பகம் (379), கோவிந்தையார் இலம்பகம் (84), காந்தருவ தத்தையார் இலம்பகம் (358), குணமாலையார் இலம்பகம் (315), பதுமையார் இலம்பகம் (246), கேமசரியார் இலம்பகம் (145) , கனகமாலையார் இலம்பகம் (339) , விமலையார் இலம்பகம் (106), சுரமஞ்சரியார் இலம்பகம் (107), மண்மகள் இலம்பகம் (225), பூமகள் இலம்பகம் (51), இலக்கணையார் இலம்பகம் (221) , முக்திஇலம்பகம் (547) என்பன 13 இலம்பகங்கள். சீவகசிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்க தேவர். இவர் சோழர்
குலத்தில் பிறந்தவர் என்று நச்சினார்க்கினியர் உரை குறிப்பிடுகின்றது. இவர், தமிழிலும் வடமொழியிலும் புலமை உடையவர். இளமையிலேயே சமண
சமயத்தைத் தழுவித் துறவுபூண்டவர்.
திருத்தக்க தேவர் சான்றோர்களுடன் தொடர்புகொள்ளக்
கருதி, மதுரைக்குச் சென்று, அங்கு சங்கப் புலவர்களோடு கூடி அளவளாவிஇருந்தபோது
அங்கிருந்த தமிழ்ப் புலவர்களில் சிலர், ஆருகத சமயத்தைச் சார்ந்தவர்கள் துறவு முதலியவற்றையே
பாடுவார்களே யன்றிக்காமச் சுவைபடக் காப்பியம் பாட இயலாதவர் என்று கூறினர் என்றும்
இதைக் கேட்ட திருத்தக்க தேவர், காமச் சுவையுடன்சிந்தாமணியை இயற்றினார் என்றும் ஒரு கதை
நிலவுகிறது. காப்பியம் செய்யக் கருதிய திருத்தக்க தேவர், தம் கருத்தினைத் தம் ஆசிரியருக்குக் கூற, அதற்கு அவர், திருத்தக்க தேவரின் புலமையைஅறிய, அப்பொழுது அங்கே ஓடிய ஒரு நரியைச் சுட்டிக்
காட்டி, ~நீங்கள் காவியம் பாடுமுன்னர், இந்த நரியைப் பொருளாக வைத்துஒரு நூல்இயற்றிக் காட்டுக| என்று கட்டளை இட்டார் என்றும், உடனே தேவரும் ஒரு சிறு நூல் பாடி அதற்கு ~நரிவிருத்தம்| என்றுபெயரிட்டுத் தம் ஆசிரியருக்குக்
காட்டினார் என்றும் குறிப்பிடுவர். அது நரியின் செயலைக் கொண்டு நீதியை
வற்புறுத்தும் நூல். நூலின்சிறப்பினை அறிந்த ஆசிரியர், ~இனி நீயிர் நினைத்தபடியே பெருங்காப்பியம் செய்க| என்று பணிக்க அப்பணியைத் தலைமேற்கொண்டு அக்காப்பியத்திற்குக் கடவுள் வாழ்த்துப் பாடி வழங்குமாறு
வேண்டினார் என்றும், ஆசிரியரும் ~செம்பொன் வரைமேற்பசும்பொன்| என்று தொடங்கும் பாட்டைப் பாடிக் கொடுத்தார் என்றும், பின்னர்த் திருத்தக்க தேவர், ~மூவர் முதலா உலகம்| என்னும்கடவுள் வாழ்த்தைப் பாடிக்
காப்பியத்தைத் தொடங்கினார் என்றும் குறிப்பிடுவர்.
Super
ReplyDelete